வெற்றி

அனைவரும் வாழ்க்கையில் விரும்புவது வெற்றியை தானே தவிர யாரும் தோல்வியை விரும்புவதில்லை. ஆனால் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் சொல்வது என்ன வென்றால் தோல்வி தான் வெற்றிக்கு வழி என்று. எடுத்துக்காட்டாக ஒரு குழந்தையை எடுத்துக்கொள்வோம். அது பிறந்ததும் உடனே நடப்பதில்லை. முதலில் கை கால்களை நன்றாக அசைக்க கற்றுக்கொண்டு பின் குப்புற படுக்க தவழ உட்கார நிற்க என்று பிறகு பல முறை விழுந்து விழுந்து பின் எழுந்து நடக்க பழகும். ஒவ்வொருமுறை விழுவது எல்லாம் தோல்வி தான். இருந்தாலும் அவற்றை தோல்வியாக கருதாமல் மறுபடி மறுபடி முயற்சி செய்து பின் நடக்க பழகி விடுகின்றது. தோல்வி என்று பயந்து முயற்சியை விட்டால் வெற்றி என்பது எட்டாக்கனி தான். தோல்விகளை படிக்கட்டாக பார்த்தால் வெற்றி என்பது நிதர்சனம். 

தோல்வி என்றால் என்ன? உண்மையில் ஒரு செயல் செய்வதனால் வரும் முடிவு வெற்றியாக இருக்கலாம் அல்லது தோல்வியாக இருக்கலாம். அந்த முடிவு பல காரணிகளால் மாறுபடும். ஆனால் ஒரு செயல் செய்வது என்று முடிவு செய்துவிட்டு அச்செயலை செய்யாமல் விட்டால் அது தான் உண்மையான தோல்வியாகும். எடுத்துக்காட்டாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, நேரம் கிடைக்கவில்லை என்று நொண்டி சாக்கு ஏதாவது சொல்லி உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தோல்வி! ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்று வாங்கிவிட்டு, அதை படிக்காமல் தள்ளி போட்டுக்கொண்டிருந்தால் அது தோல்வி! ஒரு செயல் செய்ய முனைந்து அச்செயலை எண்ணியபடி செய்வது வெற்றியாகும். அதன் பிறகு வரும் முடிவை பற்றி கவலை பட தேவையில்லை. 

சாக்ரடீசிடம் ஒரு முறை ஒரு நபர் வெற்றி அடைவது எப்படி என்று கேட்டார். அதற்கு சாக்ரடீஸ் மறு நாள் ஆற்றங்கரைக்கு வருமாறு கூறினார். மறு நாள் அந்த நபர் ஆற்றங்கரைக்கு வந்தார். நீண்ட நேரம் மவுனமாக நடந்து கொண்டே இருந்தார் சாக்ரடீஸ். தன் கேள்விக்கு பதிலை எதிர்பார்ப்பதாக அந்த நபர் கூறினார். ஆற்றில் தன்னிடம் இறங்குமாறு கூறிய சாக்ரடீஸ், ஆற்றில் இறங்கியதும் அந்த நபரை பிடித்து தண்ணீரில் அழுத்தினார். அந்த நபர் பலமுறை பலமாக முயற்சி செய்தும் வெளியே வர முடியவில்லை. பின் சாக்ரடீஸ் தன் பிடியை லேசாக தளர்த்தவே அவர் வெளியே வந்தார். வந்ததும் கோபமாக "என்னை கொல்லவா பார்க்கிறீங்க, வெற்றிக்கு வழி தானே கேட்டேன்!" என்றார். அதற்கு சாக்ரடீஸ் "இது தான் வெற்றிக்கு வழி" என்று கூறினார். "தண்ணீரில் இருக்கும் போது உனக்கு சுவாசிக்க காற்று வேண்டும் என்று எந்த அளவு ஆசை இருந்ததோ அதே அளவு உனக்கு வெற்றியின் மீது தீவிர ஆசை இருந்தால் வெற்றி நிச்சயம்" என்று கூறினார்.

Comments